Page Loader
எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை கடல்வழி சாலை - சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு தொடக்கம்
எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை கடல்வழி சாலை

எண்ணூரில் இருந்து மாமல்லபுரம் வரை கடல்வழி சாலை - சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு தொடக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 04, 2025
11:09 am

செய்தி முன்னோட்டம்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய முயற்சியாக, தமிழ்நாடு அரசு ரூ.27,600 கோடி மதிப்பில் எண்ணூர் முதல் மாமல்லபுரம் (பூஞ்சேரி) வரை 92 கிமீ கடல்வழி சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையின் முக்கிய சாலைகளில், காலை மற்றும் மாலை நேரங்களில் காணப்படும் கடும் நெரிசல் பொதுமக்கள், மாணவர்கள், அலுவலர்கள் மற்றும் அவசர மருத்துவ சேவைகளைப் பெறுபவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில் போன்ற பொது போக்குவரத்து வசதிகள் இருந்தாலும், சொந்த வாகனப் பயன்பாடு அதிகரிப்பதால், நெரிசல் குறைவதற்குப் பதிலாக தொடர்ந்து உயரும் நிலை காணப்படுகிறது.

மேம்பாலம்

கடல்வழி மேம்பாலம் - முப்பகுதியாக செயல்படுத்தப்படும்

இந்த சாலை திட்டம் மூன்று கட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது: முதல் கட்டம்: ரூ.5,400 கோடி இரண்டாம் கட்டம்: ரூ.9,000 கோடி மூன்றாம் கட்டம்: ரூ.13,200 கோடி மொத்தமாக ரூ.27,600 கோடி செலவில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல், கடல் வளங்களை பாதுகாக்கும் வகையில், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேம்பாலம் கட்டப்படும். இந்த திட்டம் கடலோர பகுதியில் அமையவிருப்பதால், கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் (CRZ) ஒப்புதல் பெறும் பணிகளும் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஒரே நேரத்தில் போக்குவரத்து சிக்கலை குறைக்கும், சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும், மற்றும் வளமான வழித்தட மேம்பாட்டை கொண்டு வரும் திட்டமாகும் என தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது