முகங்களை அடையாளம் கண்டு கள்ள ஓட்டுகளை தடுக்கும் புதிய தொழிநுட்பம்
3 நொடிகளில் முகங்களை அடையாளம் காணும் புதிய ஒரு தொழில்நுட்பத்தை சென்னையை சேர்ந்த FaceTagr என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம் 99.91% சரியாக இருக்கும் என்கின்றனர் இதன் தயாரிப்பாளர்கள். இந்த தொழில்நுட்பத்தை பீகார் தேர்தலில் அம்மாநில தேர்தல் ஆணையம் பயன்படுத்தி இருக்கிறது. நாடு முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் கள்ள ஓட்டுகளை தடுப்பது ஒரு மாபெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த பிரச்சனையை சமாளிக்க பீகார் தேர்தல் ஆணையம் 'பேஸ் ரெகக்னிஷன்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அசத்தியுள்ளது. கடந்த மே 25ஆம் தேதி நடந்த கிராமப்புற உள்ளாட்சி தேர்தலிலும், ஜூன்9 ஆம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் இந்த தொழில்நுட்பத்தை 500க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பீகார் தேர்தல் ஆணையம் பயன்படுத்தி இருக்கிறது.
விமான நிலையளிலும் பயன்படுத்தப்படும் 'பேஸ் ரெகக்னிஷன்' தொழில்நுட்பம்
வாக்காளர்களின் முகத்தை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், வாக்காளர் அட்டையில் உள்ள அவர்களது விவரங்களையும் சரிபார்க்க இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. வாக்காளரின் முகத்தை 3 நொடிகளுக்குள் ஸ்கேன் செய்யும் இந்த கருவி, அந்த படத்தை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஒப்பிட்டு பார்த்து அனுமதி வழங்குகிறது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் கள்ள ஓட்டுகளை முற்றிலுமாக ஒழிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். வரும் காலங்களில் நாடு முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் இந்த தொழிநுட்பம் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அதிநவீன தொழிநுட்பத்தை 2018ஆம் ஆண்டு முதல் சோதித்து வரும் FaceTagr அதன் முதல் வெற்றிப்படியை எட்டி இருக்கிறது. இதே தொழில்நுட்பத்தை டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களும் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.