அமெரிக்காவிற்கு வெளியே முதன்முறை: சென்னையில் உலகளாவிய திறன் மையம் அமைக்கிறது ஸ்டார்பக்ஸ்; புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டின் தொழில்நுட்ப மைய உலகளாவிய வளர்ச்சியை மேலும் உயர்த்தும் வகையில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், அமெரிக்காவிற்கு வெளியே தனது முதலாவது உலகளாவிய திறன் மையத்தை (GCC) சென்னையில் அமைக்க உள்ளது. திங்கட்கிழமை (செப்டம்பர் 21) அன்று இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிடம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. இது உலகளவில் தமிழ்நாட்டின் முதலீட்டு ஈர்ப்பு நிலையைக் மேலும் பலப்படுத்தியுள்ளது.
வேலைவாய்ப்பு
ரூ.35 லட்சம் சராசரி சம்பளத்தில் 800 பேருக்கு வேலைவாய்ப்பு
சென்னையில் அமையவுள்ள இந்த அதிநவீனத் தொழில்நுட்ப மையத்தின் மூலம் சுமார் 800 உயர் தொழில்நுட்பப் பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன.
ஆண்டுக்கு சராசரியாக ரூ.35 லட்சம் என்ற மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த உயர் சம்பளத்தில் பணியாளர்கள் கட்டம் கட்டமாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அமெரிக்காவின் சியாட்டில் மற்றும் நாஷ்வில் நகரங்களில் உள்ள தொழில்நுட்ப மையங்களுக்கு இணையாக, உலகளாவிய ஸ்டார்பக்ஸ் வணிக செயல்பாடுகளுக்கான மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை சென்னை மையம் வழங்கவுள்ளது.
காரணங்கள்
ஸ்டார்பக்ஸ் சென்னை நகரைத் தேர்ந்தெடுக்க முக்கியமான காரணங்கள்
ஸ்டார்பக்ஸ் இந்தியாவில் டாடா நுகர்வோர் தயாரிப்புகள் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் சில்லறை விற்பனைக் கடைகளிலிருந்து இந்த தொழில்நுட்ப மையம் முற்றிலும் தனித்து இயங்கும்.
இங்குள்ள உலகத்தரம் வாய்ந்த பொறியியல் உள்கட்டமைப்பு, திறமைமிக்க தொழில்நுட்ப வல்லுநர்களின் இருப்பு, உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களின் நிலையான தக்கவைப்பு விகிதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே சென்னையைத் தேர்வு செய்ததாக ஸ்டார்பக்ஸ் நிறுவனம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசின் முதலீட்டு ஊக்குவிப்புக் கொள்கை மற்றும் நிதியுதவி
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உலகளாவிய திறன் மையங்கள் (GCC) ஊக்குவிப்புக் கொள்கை (2024-2027) மற்றும் சிறப்பு வழித்தடத் திட்டம் (Corridor Program) ஆகியவை உலகளாவிய நிறுவனங்களை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஊழியர்களின் சம்பளத்தில் 30%, 20% மற்றும் 10% மானியம் வழங்கும் அரசின் திட்டம் இத்தகைய முதலீடுகளுக்குப் பெரிதும் உதவுகிறது.
ஓஎம்ஆர், போரூர்-பூந்தமல்லி சாலை மற்றும் பல்லாவரம்-ரேடியல் சாலை ஆகிய பகுதிகள் இத்தகைய மாபெரும் மையங்களுக்கான முதன்மை தேர்வாக உருவெடுத்துள்ளன.