ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
செய்தி முன்னோட்டம்
ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 நாடுகளின் மூன்றாவது சுற்றுலா பணிக்குழு கூட்டம் இன்று(மே 22) முதல் பலத்த பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது.
ஆகஸ்ட் 2019இல் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து அதன் மாநில அந்தஸ்தை நீக்கியது. அதற்கு பிறகு, ஜம்மு காஷ்மீரில் சர்வதேச நிகழ்வு நடப்பது இதுவே முதல்முறையாகும்.
ஸ்ரீநகர் நகரின் சில பகுதிகள் மற்றும் ஜி20 மாநாடு நடைபெற இருக்கும் ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்திற்கு செல்லும் சாலைகள் ஆகியவை புத்தாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஜி20 தலைவர் பதவியை ஏற்றிருக்கும் இந்தியா தனது பாதி வேலையை முடித்துவிட்டதாகவும், இதுவரை நாடு முழுவதும் 118 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது என்றும் ஜி20 தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறியுள்ளார்.
details
காஷ்மீரில் ஜி-20 மாநாட்டை நடத்துவதற்கு சீனா எதிர்ப்பு
சுற்றுலா தொடர்பான முந்தைய இரண்டு கூட்டங்களுடன் ஒப்பிடுகையில், ஸ்ரீநகர் கூட்டத்திற்கு அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர் என்று ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.
ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகளில் இருந்து சுமார் 60 பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
மேலும், ஸ்ரீநகர் நிகழ்ச்சிக்கு சிங்கப்பூரில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் வர இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காஷ்மீரில் ஜி-20 மாநாட்டை நடத்துவதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சவுதி அரேபியா இந்த நிகழ்விற்கு பதிவு செய்யவில்லை. ஸ்ரீநகர் கூட்டத்தில் இருந்து விலகி இருக்க துருக்கி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
"சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஜி-20 கூட்டங்களை நடத்துவதை சீனா உறுதியாக எதிர்க்கிறது." என்று சீன வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.