கேரளாவில் பரவும் எலி காய்ச்சல் - தமிழக எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
செய்தி முன்னோட்டம்
கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக எலிக் காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதாக கூறப்படுகிறது.
பருவமழை துவங்கியுள்ள காரணத்தினால் அங்கு நோய் தொற்று ஏற்பட்டு வருவதாக தெரிகிறது.
இதன் காரணமாக தமிழக எல்லையோர மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான நீலகிரி, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் வாலையார் சோதனை சாவடி, பொள்ளாச்சி மீனாட்சிபுரம், ஆனைக்கட்டி போன்ற பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு, கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்ப்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
கண்காணிப்பு
பொது இடங்களில் நில வேம்பு கஷாயம் - அதிகாரிகள் முடிவு
மேலும், தமிழக எல்லையோர மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், தாய் சேய் நல மருத்துவமனைகள், மருத்துவ ஆய்வகங்கள் உள்ளிட்ட இடங்களில் அனைத்தும் சரியான நிலையில் உள்ளதா என்பதனையும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனையடுத்து டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க ஏடிஎஸ் கொசு உற்பத்தியினை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
தண்ணீரை மூடி வைத்து உபயோகிக்குமாறு மக்கள் மத்தியில் பல விழிப்புணர்வுகளும் அவ்வப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பொது இடங்களில் நில வேம்பு கஷாயத்தினை மக்களுக்கு வழங்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்வதாக தகவல்கள் தெரிவிக்கிறது.