ஹெச்.ராஜா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு; 6 மாதம் சிறை தண்டனை
சென்னை சிறப்பு நீதிமன்றம், பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜாவை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான எச். ராஜா, 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் "பெரியார் சிலை உடைப்பேன்" என்று பதிவிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக திமுக நாடாளுமன்ற உறுப்பினரான மு.க. கனிமொழி குறித்தும் அவதூறு கருத்துகள் தெரிவித்திருந்தார். இந்த நடவடிக்கைகள் குறித்து ஈரோடு மாவட்டத்தில் எச். ராஜாவுக்கு எதிராக ஆபாசமாகப் பேசுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் செயல்படுதல் மற்றும் கலவரத்தை தூண்டும் நோக்கில் செயல்படுதல் ஆகிய குற்றங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
Twitter Post
6 மாத சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்த சிறப்பு நீதிமன்றம்
இதன் பின்னர், இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. எச். ராஜா இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றம் அந்த வழக்கை மூன்று மாதத்துக்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக விசாரணை நிறைவு பெற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சிறப்பு நீதிமன்றம் எச். ராஜாவை குற்றவாளி என தீர்மானித்து, ஒவ்வொரு வழக்கிற்கும் தலா 6 மாத சிறைத் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.