Page Loader
நடு வானில் விமான கழிவறைக்குள் ஒரு மணி நேரம் சிக்கி கொண்ட ஸ்பைஸ்ஜெட் பயணி

நடு வானில் விமான கழிவறைக்குள் ஒரு மணி நேரம் சிக்கி கொண்ட ஸ்பைஸ்ஜெட் பயணி

எழுதியவர் Sindhuja SM
Jan 17, 2024
04:58 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று காலை மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் கழிவறை கதவு பழுதடைந்ததால், பயணி ஒருவர் கழிவறைக்குள் சுமார் ஒரு மணி நேரம் சிக்கிக் கொண்டார். மும்பையில் இருந்து அதிகாலை 2:13 மணிக்கு அந்த விமானம் புறப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பயணித்த ஆண் பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றிருக்கிறார். ஆனால், கழிவறைக்குள் சென்ற அவரால் வெளியே வர முடியவில்லை. அதன் பிறகு தான், கழிவறை கதவின் பூட்டு பழுதடைந்தது விமான பணியாளர்களுக்கு தெரியவந்தது. அதனால், அதிகாலை 3:10 மணிக்கு பெங்களூரில் தரையிறங்கும் வரை கழிவறைக்குள் சிக்கி இருந்த பயணி உள்ளேயே காத்திருக்க வேண்டியிருந்தது.

டிஜேவி

கதவு பூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தவித்த பயணி 

இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கும் ஸ்பைஸ்ஜெட், இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்ட பயணிக்கு முழு கட்டணமும் திரும்ப வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பயணி கழிவறைக்குள் சிக்கி இருந்த போது, அவருக்கு தேவையான அனைத்து உதவியும் வழங்கப்பட்டதாக விமான நிறுவனம் கூறியுள்ளது. "ஜனவரி 16 அன்று, மும்பையிலிருந்து பெங்களூருக்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஒரு பயணி துரதிர்ஷ்டவசமாக சுமார் ஒரு மணி நேரம் கழிவறைக்குள் சிக்கிக்கொண்டார். கதவு பூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டது. எனினும், பயணம் முழுவதும், எங்கள் குழுவினர் அவருக்கு தேவையான உதவி மற்றும் வழிகாட்டுதலை வழங்கினர்." என்று ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

பயணி கழிவறைக்குள் சிக்கி இருந்த போது கதவின் இடைவெளி வழியாக அவருக்கு வழங்கப்பட்ட ஆறுதல் குறிப்பு