வேளாங்கண்ணி தேர்த்திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணி மற்றும் திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி புதன்கிழமை (ஆகஸ்ட் 28) திருச்சியில் பகல் 12 மணிக்கு ரயில் கிளம்பி மாலை 4.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். மறுமார்க்கமாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) காலை 10.45க்கு கிளம்பும் ரயில் மாலை 4.10க்கு திருச்சிக்கு சென்றடையும். இதேபோல், புதன்கிழமை இரவு 7.10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து கிளம்பும் ரயில் அடுத்த நாள் அதிகாலை 3.35 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். மறுமார்க்கமாக வெள்ளிக்கிழமை இரவு 12.30 மணிக்கு கிளம்பும் ரயில் சனிக்கிழமை காலை 8.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
வேளாங்கண்ணி திருவிழா
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித அன்னை பேராலயத்தில் ஒவ்வோர் ஆண்டும் தேர்த் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த திருவிழாவில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் பங்குபெறுவது வழக்கமாகும். இந்நிலையில், இந்த ஆண்டில் தேர்த்திருவிழா ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் திருவிழாவிற்கு வருவார்கள் என்பதால் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, தேர்திருவிழாவிற்கான கொடியேற்றத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 29 அன்று நாகை மற்றும் கீழ்வேளூர் பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.