நடிகை கௌதமி அளித்த புகார் - அழகப்பன் உட்பட 6 பேரை பிடிக்க 3 தனிப்படைகள்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கௌதமி.
இவர் பாஜக.,வில் இணைந்து பல ஆண்டுகளாக கள பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த அக்.,23ம்.,தேதி அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனிடையே கௌதமி கடந்த மாதம் கமிஷனர் அலுவலகத்தில் தனது சொத்துக்களை ஏமாற்றியதாக கூறி பாஜக.,பிரமுகர் அழகப்பன் மீது புகாரளித்திருந்தார்.
குற்றம்சாட்டப்பட்ட அழகப்பன் என்பவர் காரைக்குடியை சேர்ந்த பைனான்சியர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்புகார் குறித்து மத்திய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தனது விசாரணையினை நடத்தி வருகிறது.
மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் ரூ.25 கோடி மதிக்கத்தக்க நிலத்தின் ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா?என்பதை கண்டறிய சிவகங்கை-கோட்டையூரிலுள்ள அழகப்பன் இல்லத்தில் காரைக்குடி வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
புகார்
6 முறை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன்
கடந்த அக்.,31ம் தேதி நடத்தப்பட்ட இந்த ஆய்வில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
நண்பகல் துவங்கிய இந்த சோதனை நள்ளிரவில் நிறைவடைந்த நிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட அறைகள் சீல் வைத்து பூட்டப்பட்டுள்ளது.
மேலும் விசாரணைக்கு ஆஜராகுமாறு இதுவரை 6 முறை சம்மன் அனுப்பியும் தலைமறைவாகவுள்ள அழகப்பன் உள்ளிட்ட குற்றச்சாட்டப்பட்ட 6 பேர் ஆஜராகவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக இவர்கள் 6 பேரை பிடிக்க 3 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான காரைக்குடி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடத்தி கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தெரிவித்துள்ளது.