சென்னை ஐஐடியில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை
செய்தி முன்னோட்டம்
சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில்(ஐஐடி) மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னையிலுள்ள ஐஐடியில் இந்த வருடம் நடக்கும் 3வது தற்கொலை இதுவாகும்.
தற்கொலை செய்துகொண்டவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 32 வயதுடைய மாணவர் சச்சின் என்றும் அவர் ஐஐடியில் பிஎச்டி படித்துக் கொண்டிருந்தார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கல்லூரி வளாகத்திற்கு வெளியே வேளச்சேரியில் உள்ள தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்து கொளவதற்கு முன்பு, அவர் "மன்னிக்கவும், நான் போதுமானவனாக இல்லை" என்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஸ்டேட்டஸை பார்த்த அவரது நண்பர்கள், சச்சின் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். அப்போது அவர் தூக்கிட்டு கொண்டது தெரியவந்தது.
இந்தியா
ஆராய்ச்சி சமூகத்திற்கு ஒரு பெரிய இழப்பு: ஐஐடி
அதன் பின் ஒரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது.
"2023 மார்ச் 31 அன்று மதியம் சென்னை வேளச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த பிஎச்டி ஆராய்ச்சி மாணவர் அகால மரணமடைந்தார் என்பதை தெரிவித்து கொள்வதில் வேதனையடைகிறோம். முன்மாதிரியான கல்வி அறிவும் ஆராய்ச்சிப் பதிவும் கொண்ட ஒரு மாணவர் உயிரிழந்தது ஆராய்ச்சி சமூகத்திற்கு ஏற்பட்ட ஒரு பெரிய இழப்பு" என்று ஐஐடி ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மூன்றாம் ஆண்டு பிடெக் மாணவர் ஒருவரும், ஆராய்ச்சி மாணவர் ஒருவரும் சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.