Page Loader
மக்களவை தேர்தலுக்கான 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் 

மக்களவை தேர்தலுக்கான 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் 

எழுதியவர் Sindhuja SM
Mar 12, 2024
06:49 pm

செய்தி முன்னோட்டம்

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 43 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் கமல்நாத், அசோக் கெலாட் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களின் மகன்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதியில் முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்தின் மகன் நகுல்நாத் போட்டியிட இருக்கிறார். அவர் அதே தொகுதியில் தான் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட், ராஜஸ்தானின் ஜலோர் தொகுதியில் போட்டியிட உள்ளார்

இந்தியா 

இரண்டாவது பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் 

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் மகன் கௌரவ் கோகோய் ஜோர்ஹாட் தொகுதியில் போட்டியிட உள்ளார். அவர் தற்போது கலியாபோர் தொகுதியின் எம்.பி ஆவார். காங்கிரஸின் இரண்டாவது பட்டியலில் அசாமில் இருந்து 12 பேர், குஜராத்தில் இருந்து 7 பேர், மத்தியப் பிரதேசத்தில் இருந்து 10 பேர், ராஜஸ்தானில் இருந்து 10 பேர், டாமன் மற்றும் டையூவில் இருந்து ஒருவர் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் உள்ள 76.7 சதவீத வேட்பாளர்கள் சிறுபான்மையினர், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.