பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் 'பயங்கரவாத நாடுகள்' பற்றி பேசிய பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று(ஜூலை 4) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சி மாநாடு ஆன்லைனில் நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதால் உலகளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தானும் கலந்து கொண்டது. பாகிஸ்தான் சார்பில் அந்நாட்டு பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பங்கேற்றார். இந்நிலையில், அவர் முன்னிலையில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, "சில நாடுகள் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களாக உள்ளன. மேலும், அந்த நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கொள்கை கருவிகளாகப் பயன்படுத்துகின்றன" என்று தெரிவித்தார். பாகிஸ்தானை மறைமுகமாக சாடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இப்படி உரையாற்றி இருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
'பயங்கரவாதத்தில் இரட்டை வேடம் போடக்கூடாது': பிரதமர் மோடி
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதியை நிலைநாட்ட பயங்கரவாதத்திற்கு எதிராக SCO நாடுகள் நிற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மேலும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை விமர்சிப்பதில் SCO தயங்கக் கூடாது என்றும் அவர் கூறினார். எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்தில் இரட்டை வேடம் போடக்கூடாது என்றும் சாடினார். ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து உரையாற்றிய போது, "ஆப்கானிஸ்தான் மண்ணையும் அதன் சுற்றுப்புறத்தையும் சீர்குலைக்கவோ சுரண்டவோ கூடாது. SCO உறுப்பு நாடுகள் ஆப்கானிஸ்தானின் நலனுக்காக பங்களிக்க வேண்டும்." என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்க்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதினும் தன் உரையின் போது கூறினார்.