லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள்
கடந்த இரண்டு மாதங்களாக லிபியாவில் சிக்கித் தவித்த நான்கு இளைஞர்கள், தலா 3,000 டாலர்களுக்கு தாங்கள் விற்கப்பட்டதாக நேற்று(பிப் 14) கூறியுள்ளனர். லாங் மஜாரியைச் சேர்ந்த லக்விந்தர் சிங், கபுர்தலாவைச் சேர்ந்த குர்பிரீத் சிங், மோகாவைச் சேர்ந்த ஜோகிந்தர் சிங் மற்றும் பீகாரைச் சேர்ந்த சனோஜ் குமார் ஆகிய இளைஞர்கள் இரண்டு மாதங்களாக லிபியாவில் சிக்கித் தவித்து ஞாயிற்றுக்கிழமை(பிப் 12) தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். அந்த இளைஞர்கள் தாங்கள் விற்கப்பட்டதாகவும், ஒரு நிறுவனத்திற்குள் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்ததாகவும், அடிமைகளைப் போல நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும், தங்களை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வர உதவிய இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
உணவு மற்றும் தண்ணீர் கூட இல்லாமல் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம்
அவர்கள் லிபியாவின் பெங்காசியில் அமைந்துள்ள எல்சிசி சிமெண்ட் நிறுவனத்தில் கூலி வேலைக்குச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு சென்றடைந்த போது, தாங்கள் 3000 டாலர்களுக்கு விற்கப்பட்டதாக அவர்களுக்கு புரிந்திருக்கிறது. அங்கு அவர்கள் 18 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும், சில சமயங்களில் உணவு மற்றும் தண்ணீர் கூட இல்லாமல் அவர்களிடம் வேலை வாங்கினர் என்றும் தெரியவந்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் துபாய்க்கு ஓட்டுநர் வேலைக்காகச் சென்றதாகவும், ஆனால் மற்ற இளைஞர்களுடன் தான் லிபியாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் குர்பிரீத் சிங் கூறி இருக்கிறார். இது போல வேறு யாரும் அங்கு சிக்கி இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் துனிசியாவில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளது.