
காவல்துறை தாக்குதலில் பலியான அஜித் குமார் சகோதரர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி; காரணம் என்ன?
செய்தி முன்னோட்டம்
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் காவல்துறையினரின் கொடூர தாக்குதலில் பலியான அஜித் குமாரின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளம் கோயில் காவலாளி அஜித் குமாரின் மரணம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சம்பவத்தின் போது தாக்கப்பட்டதாகக் கூறப்படும் அவரது சகோதரர் நவீன் குமார், காலில் பலத்த காயம் காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நகை திருட்டு தொடர்பாக நிகிதா என்ற பேராசிரியர் அளித்த புகாரைத் தொடர்ந்து அஜித் குமாரை மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்து, மிளகாய்ப் பொடியைப் பயன்படுத்தி, உயிருக்கு ஆபத்தான காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இழப்பீடு
அஜித் குமார் குடும்பத்திற்கு இழப்பீடு
அஜித் குமாருக்கு காவல்துறையின் தாக்குதலால் மூளையில் இரத்தக்கசிவு மற்றும் உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து, தமிழக அரசு அஜித் குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததோடு, இழப்பீடு மற்றும் நவீன் குமாருக்கு இழப்பீட்டின் ஒரு பகுதியாக ஆவினில் வேலை வழங்குவதாக அறிவித்தது. மேலும் பல அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர். இந்நிலையில், அஜித் குமாரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தாக்கும்போது உடனிருந்த நவீன் குமாரையும் கடுமையாக தாக்கியதில் அவருக்கு பாதங்களில் கடுமையான வலி ஏற்பட்டதை அடுத்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.