சிக்கிம் பனிச்சரிவு: நாதுலாவில் 7 பேர் பலி, 12 பேர் படுகாயம்
சிக்கிமின் நாதுலா பகுதியில் நேற்று(ஏப் 4) ஏற்பட்ட பெரும் பனிச்சரிவால் குறைந்தது ஏழு சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர் என்றும் 12 பேர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கட்டுள்ளது. இதுவரை 20 பேர் மீட்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் தேடுதல் பணி தொடங்கியுள்ளது. "பிற்பகல் 3 மணியளவில், 14 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள இராணுவ மருத்துவ நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அதில் ஏழு பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 7 பேருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு காங்டாக் அனுப்பிவைக்கப்பட்டனர்." என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று காங்டாக் மாவட்ட மாஜிஸ்திரேட், மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இனி NDRF தேவை இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், காயமடைந்த 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை துறை அமைச்சர் ஆகியோர் இரங்கல்
உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். "சிக்கிமில் ஏற்பட்ட பனிச்சரிவால் துயரம் அடைந்துள்ளேன். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன, பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன" என்று பிரதமர் மோடி கூறியதாக பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது. இரங்கல் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிலைமையை தங்கள் அமைச்சகம் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.