சிக்கிமில் ஏற்பட்ட பெரும் பனிச்சரிவு: 6 சுற்றுலா பயணிகள் பலி, 150க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு
சிக்கிமின் நாது லா மலைப்பாதையில் இன்று(ஏப் 4) ஏற்பட்ட பெரிய பனிச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் பலர் பனிக்குள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. சீனாவின் எல்லையில் அமைந்துள்ள நாது லா கணவாய், ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும். இன்று மதியம் 12.20 மணியளவில் அப்பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால், 4 ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட 6 பேர் அருகிலுள்ள இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின் உயிரிழந்தனர். மீட்புப் பணிகளை சிக்கிம் காவல்துறை, சிக்கிம் டிராவல் ஏஜென்ட்கள் சங்கம், சுற்றுலாத் துறை அதிகாரிகள், வாகன ஓட்டுநர்கள் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
பனியில் சிக்கி தவிக்கும் 150க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்
காங்டாக்கை நாதுலாவுடன் இணைக்கும் ஜவஹர்லால் நேரு சாலையின் 15வது மைலில் ஏற்பட்ட பனிச்சரிவால் 6 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர் என்றும் 80க்கும் மேற்பட்டோர் பனியில் சிக்கியிருக்கலாம் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 150க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இன்னும் 15வது மைலுக்கு அப்பால் சிக்கித் தவிக்கின்றனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது. பனியின் கீழ் சிக்கிய 30 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டு காங்டாக்கில் உள்ள எஸ்டிஎன்எம் மருத்துவமனை மற்றும் சென்ட்ரல் ரெபரல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செக்போஸ்ட் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சோனம் டென்சிங் பூட்டியா, "பாஸ்கள் 13வது மைலுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆனால் சுற்றுலா பயணிகள் அனுமதியின்றி 15வது மைலுக்கு சென்றிருக்கிறார்கள். சம்பவம் 15வது மைலில் தான் நடந்ததுள்ளது." என்று கூறியுள்ளார்.