Loading...
இன்றைய அரசியல் முற்றிலும் சீரழிந்துவிட்டது! தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சித்தராமையா அறிவிப்பு
தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு

இன்றைய அரசியல் முற்றிலும் சீரழிந்துவிட்டது! தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக சித்தராமையா அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 26, 2026
04:51 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, வரும் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இன்றைய அரசியல் களம் முற்றிலும் சீரழிந்துபோய் விட்டது என்றும், தனது அதிகரிக்கும் வயது மற்றும் நலிவடைந்து வரும் உடல்நிலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கர்நாடக முதலமைச்சராக இருந்த சித்தராமையாவிற்கு பதிலாக டி.கே.சிவகுமார் பொறுப்பேற்ற சில வாரங்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரணம்

வயது மற்றும் உடல்நிலையைக் காரணமாக்கிய சித்தராமையா

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சித்தராமையா, 2028 தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது தனக்கு 79 வயதாகிறது என்றும், மாநில அரசின் பதவிக்காலம் மேலும் ஒன்றரை ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் வரும்போது தனக்கு 81 முதல் 82 வயதாகிவிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்பைப் போலத் தன்னால் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்ற இயலவில்லை என்றும், தனது உடல்நிலை முன்பைப் போல வலுவாக இல்லை என்றும் அவர் தனது பதிவில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சீரழிவு

சீரழிந்துபோன இன்றைய அரசியல் களம்

தொடர்ந்து தனது நிலைப்பாடு குறித்து விளக்கிய சித்தராமையா, இன்றைய அரசியல் களம் முற்றிலும் ஊழல் நிறைந்து சீரழிந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

நேர்மையான அரசியலுக்கு இங்கு நிற்க இடமில்லை என்றும், கடந்த காலங்களில் மக்கள் தனக்குப் பண உதவி செய்து தேர்தலில் வெற்றி பெற வைத்த நிலை மாறி, இப்போது தேர்தல் களத்தில் மக்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் மக்களின் குறைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் பொது வாழ்வில் தீவிரமாக ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அரசியல் பயணம்

50 ஆண்டுகால அரசியல் பயணமும் மக்களின் ஆதரவும்

மண்டியாவில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றிலும், எக்ஸ் தளத்திலும் பேசிய சித்தராமையா, 2028 ஆம் ஆண்டுடன் தனது 50 ஆண்டுகால அரசியல் பயணம் நிறைவடைவதை சுட்டிக்காட்டினார்.

கடந்த 1978 ஆம் ஆண்டு தாலுகா போர்டு உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய அவர், வெற்றி தோல்விகளைக் கடந்து கொள்கைகளுக்கு எதிராகவோ, மனசாட்சிக்குத் துரோகமாகவோ என்றுமே நடந்துகொண்டதில்லை என்று திருப்தியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐந்து தசாப்தங்களாகத் தனக்கு ஆதரவளித்த கர்நாடக மக்களுக்கு நன்றியையும், அவர்களின் அன்புக் கடனை அடைக்கத் தொடர்ந்து பொதுச்சேவை செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT