தாயகம் திரும்ப ஷேக் ஹசீனா திட்டம்: புதிய பாஸ்போர்ட் கேட்டு தூதரகத்தில் விண்ணப்பம்
செய்தி முன்னோட்டம்
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா, தாயகம் திரும்புவதற்காகப் புதிய கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை கோரி டெல்லியில் உள்ள அந்நாட்டுத் தூதரகத்தில் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளார். கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் வெடித்த மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த அவர், வரும் டிசம்பர் மாதம் வங்கதேசம் திரும்பி நீதிமன்றத்தில் சரணடைய விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதற்காகப் புதிய பயண ஆவணங்களை விரைந்து வழங்குமாறு அவரது லண்டன் வழக்கறிஞர்கள் தூதரகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
எதிர்ப்பு
வங்கதேச இடைக்கால அரசின் கடும் எதிர்ப்பு
ஹசீனாவுக்கு புதிய ஆவணங்களை வழங்குவதற்கு வங்கதேச வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஹுமாயூன் கபீர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "குற்ற வழக்குகளை எதிர்கொண்டு வரும் ஒருவரைத் திரும்ப அழைத்து வரக் கடவுச்சீட்டு தேவையில்லை.
இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையே உள்ள குற்றவாளிகள் ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் படியே அவர் டாக்காவிற்கு அனுப்பப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ள நிலையில், தப்பி ஓடிய ஒருவரை சட்டரீதியான நடைமுறைகளின் வழியே கைது செய்து அழைத்து வருவதே சரியான வழி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கள நிலவரம்
இரு நாட்டு உறவுகள்
ஹசீனாவின் வழக்கறிஞர்கள் மனித உரிமைகள் மற்றும் குடியுரிமை அடிப்படையிலேயே புதிய பயண ஆவணங்களைக் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஹசீனா தங்கியிருப்பது புது டெல்லி மற்றும் டாக்கா இடையேயான உறவுகளில் தொடர்ந்து ஒரு முக்கிய விவாதப் பொருளாக நீடித்து வருகிறது.
மேலும் அவர் மீண்டும் தாயகம் திரும்பினால் நாட்டின் அரசியல் களம் எத்தகைய மாற்றங்களைச் சந்திக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அவரது வருகை குறித்த முறையான தேதியை ஆவணப் பணிகள் முடிவடைந்ததும் அவரது தரப்பினர் முறைப்படி அறிவிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.