
பிரிஜ் பூஷன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: பிரதமரிடம் பிரியங்கா காந்தி கேள்வி
செய்தி முன்னோட்டம்
பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரிஜ் பூஷன், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரிஜ் பூஷனுக்கு எதிரான FIRரில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா காந்தி, "நரேந்திர மோடி ஜி, இந்த கடுமையான குற்றச்சாட்டுகளைப் படித்துவிட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நாட்டுக்கு சொல்லுங்கள்" என்று கூறியுள்ளார்
DETAILS
பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிரான இரண்டு FIRகளில் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள்
தொழில்முறை உதவிக்கு பதிலாக "பாலியல் சலுகைகள்" கோரும் நிகழ்வுகள், குறைந்தது 15 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள், தகாத முறையில் மல்யுத்த வீரர்களை தொடுதல், துஷ்பிரயோகம், மார்பகத்தை தொடுதல், தொப்புளைத் தொடுதல், பின்தொடர்தல், மிரட்டல் ஆகியவை பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிரான FIRரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக ஏப்ரல் 28 ஆம் தேதி டெல்லி காவல்துறையில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு FIRகளில் இவை முக்கிய குற்றச்சாட்டுகளாகும்.
இது குறித்த விரிவான செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.