அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ்: அடுத்த 4 நாட்களுக்கு டெல்லியில் சுட்டெரிக்க இருக்கும் வெயில்
இன்று டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸைத் தொடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. அதே நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.6 புள்ளிகள் அதிகரித்து 29.2 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும், அடுத்த நான்கு நாட்களுக்கு தேசிய தலைநகரில் வெப்பமான வானிலை நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று, டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 45.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது சாதாரண வெப்பநிலையை விட ஐந்து டிகிரி அதிகமாகும் என்று சஃப்தர்ஜங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை லேசான மழை பெய்யக்கூடும்
கடந்த வாரம் முதல், டெல்லி நகரின் அதிகபட்ச வெப்பம் 40 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது. டெல்லியில் அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரியாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன் பிறகு, வியாழக்கிழமை ஒரு டிகிரி குறையும் என்றும், வெள்ளிக்கிழமை 44 டிகிரி ஆகவும், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் 43 டிகிரி ஆகவும் வெப்பம் குறையும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. வெள்ளிக்கிழமை லேசான மழை பெய்யும் என்றும், அதற்கு மறுநாள் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, டெல்லியில் உள்ள முங்கேஷ்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 48.3 டிகிரி செல்சியஸாக பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.