காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்
காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) தலைவர் ஜக்மீத் சிங், கனேடிய கவிஞர் ரூபி கவுர், தன்னார்வ தொண்டு நிறுவனமான யுனைடெட் சீக்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஆர்வலர் குர்தீப் சிங் சஹோதா ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இந்த ட்விட்டர் கணக்குகளை அணுக முயற்சித்தால், "இந்த கணக்குகள் சட்டப்பூர்வ கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன" என்ற செய்தி மட்டும் வருகிறது. இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற என்டிபி தலைவர் ஜக்மீத் சிங்கின் கணக்கு முடக்கப்பட்டது பெரிதாக பார்க்கப்படுகிறது.
லண்டன் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகங்கள் சேதம்
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த இந்தியர்கள், காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களில், லண்டன் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகங்கள் காலிஸ்தான் ஆதரவாளர்களால் சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியா தனது அதிருப்தியை புது டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திடம் தெரிவித்ததுடன், நல்ல பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு வலியுறுத்தியது. இந்திய மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்த சம்பவங்களை விசாரித்துக்கொண்டிருந்தபோது, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு வெளியே மற்றொரு தாக்குதலை நடத்தினர்.