செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம்தேதி காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே இவரது வழக்கினை எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதன்பின்னர் இவர் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில், அதனை விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு தான் அதிகாரம் உள்ளது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
14 நாட்களுக்கு நீட்டிப்பு
அதன்படி அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவினை விசாரிப்பதாக சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்தார். இதற்கிடையே செந்தில் பாலாஜிக்கு இன்றோடு(செப்.,15) நீதிமன்றக்காவல் நிறைவடைந்தது. முன்னதாக அவர் அடுத்த விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டாம் காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டால் போதுமானது என்று சிறப்பு நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி காணொளி காட்சி மூலம் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரின் நீதிமன்ற காவலினை மேலும் 14 நாட்கள் அதாவது வரும் 29ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த காலவரிசையைப் பகிரவும்