LOADING...
பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது
அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது

எழுதியவர் Sindhuja SM
Aug 13, 2023
03:59 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் இன்று(ஆகஸ்ட் 13) கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழக போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி தொடர்புடைய நபர்களை தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளும் சோதனை செய்யப்பட்டது.

டிஜிக்

நாளை அசோக் குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் 

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பிறகு, விசாரணைக்கு ஆஜராகுமாறு 4 முறை அசோக் குமாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் நான்கு முறையும் ஆஜராகவில்லை. அதன் பிறகு, அசோக் குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸும் வெளியிடப்பட்டது. லுக் அவுட் நோட்டீஸ் என்பது அவரை எங்கு கண்டாலும் தகவல் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும் நோட்டீஸ் ஆகும். இந்நிலையில், இன்று கொச்சியில் வைத்து அசோக் குமார் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன், அசோக் குமாரின் மனைவிக்கு சொந்தமான நிலத்தை அமலாக்கத்துறை கைப்பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.