செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - ஜூலை 14ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு
தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்த குற்றத்திற்காக அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு ஒன்றினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கினை தற்போது 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சி.வி.கார்த்திகேயன் கடந்த 2 நாட்களாக விசாரித்து வருகிறார். அதன்படி இன்று நடந்த விசாரணையில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி அவர்கள் பக்க நியாயத்தினை முன்வைத்து வாதாடினார். அதன் பின்னர் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
ஜூலை 26ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையினை வரும் ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து, ஜூலை 14ம் தேதி இந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஒரு முடிவுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், இன்று(ஜூலை.,12) அவர் காவேரி மருத்துவமனையில் இருந்தபடியே காணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் உடல்நிலை குறித்து விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலினை வரும் ஜூலை 26ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.