அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செயற்கை சுவாசம் - காவேரி மருத்துவமனை
செய்தி முன்னோட்டம்
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜூன் 14ம்தேதி காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நள்ளிரவு வரை தொடர்ந்த இந்த சோதனைக்கு பிறகு அதிகாரிகள், செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
அப்போது பாதி வழியிலேயே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தினால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது இருதயத்துடிப்பில் மாறுபாடு இருந்த காரணத்தினால் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து கண்காணித்து வந்தனர்.
இதனிடையே அவரது மனைவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரினார்.
அவரது கோரிக்கையினை நீதிமன்றம் ஏற்றதையடுத்து, காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார்.
உடல்நிலை
தீவிர கண்காணிப்பில் செந்தில் பாலாஜி
அங்கு அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதன்படி, நேற்று(ஜூன்.,21)இந்த அறுவை சிகிச்சையானது காவேரி மருத்துவமனையிலேயே 5 மணிநேரம் நடந்துள்ளது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது ரத்த ஓட்டம் சீராக உள்ளது என்றும், அவரை பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தீவிரக்கண்காணிப்பில் வைத்துள்ளார்கள் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் 2-3 நாட்களுக்கு அவர் ஐசியூ வார்டில் வைக்கப்பட்டிருப்பார், பின்னர் நார்மல் வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, அறுவை சிகிச்சை முடிந்ததையடுத்து செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை ஸ்வாசம் வைக்கப்பட்டுள்ள நிலையில், 24 மணிநேரத்திற்கு பிறகு வெண்டிலேட்டர் அகற்றப்பட்டு அவர் இயற்கையான முறையில் சுவாசிக்க துவங்குவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.