செந்தில் பாலாஜி கைது விவகாரம் - நோட்டீஸ் விடுத்த மனித உரிமை ஆணையம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரான செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜூன்.,14ம்தேதி காலை முதல் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தினர்.
கிட்டத்தட்ட 17 மணிநேரம், நள்ளிரவுவரை தொடர்ந்த இந்த சோதனைக்குப்பிறகு அதிகாரிகள், செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றுனர்.
அப்போது அவருக்கு பாதி வழியிலேயே நெஞ்சுவலி வந்த காரணத்தினால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே, அமைச்சரின் மனைவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற அனுமதிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
அந்த மனுவிற்கு நீதிமன்றமும் ஒப்புதலளித்த நிலையில், ஜூன் 15ம்தேதி இரவு செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில்பாலாஜியிடம் விசாரணையினை மேற்கொள்ள முடியவில்லை.
மனித உரிமை ஆணையம்
அமலாக்கத்துறைக்கு 6 வார கால அவகாசம்
இதனை காரணமாக கொண்டு அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கு நாளை(ஜூன்.,21)விசாரணைக்கு வரவுள்ள நிலையில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டப்பொழுது மனித உரிமைகள் மீறப்பட்டதாக அவரது மனைவி மேகலா மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து இந்த மனித உரிமை மீறல் புகார் குறித்து அமலாக்கத்துறையின் சென்னை மண்டல இணை இயக்குனர் 6 வார கால அவகாசத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் கைது செய்யப்படும் பொழுது தான் தாக்கப்பட்டதாக ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசனிடம் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.