அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த அமலாக்கத்துறை
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யவேண்டுமென மருத்துவர்கள் கூறிய நிலையில், அமைச்சரின் மனைவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற அனுமதிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இதற்கு நீதிமன்றமும் ஒப்புதல் அளித்த நிலையில், ஜூன் 15ம்தேதி இரவு செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே அவரை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரியதற்கு சென்னை செசன்ஸ் நீதிமன்றம் ஜூன் 16ம் தேதி அனுமதியளித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவின் நகல் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற அலுவலர்கள் மூலம் கொடுக்கப்பட்ட நிலையில், அவரும் அதனை கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டார்.
நாளை மறுநாள் விசாரணை செய்ய ஒப்புதல்
அதன்படி, முதல்நாள் அதிகாரிகள் அமைச்சரிடம் எவ்வித விசாரணையினையும் நடத்தவில்லை. சிகிச்சைக்கு எவ்வித இடையூறும் அளிக்க கூடாது என்று நீதிமன்றம் கூறிய நிலையில், செந்தில் பாலாஜிக்கு மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சையளித்து வருவதால் அமலாக்கத்துறையினருக்கு விசாரணை நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் தற்போது அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவினை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது. ஆனால் இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம் நாளை மறுதினம்(ஜூன்.,21) இந்த மனுவினை விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.