ஒரே பாலினத் திருமண மனுக்கள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்
இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஏப்ரல் 18ஆம் தேதி விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் இன்று(மார் 13) தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் எடுக்கும் எந்த முடிவும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இது "முக்கியத்துவம் வாய்ந்த விஷயம்" என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த விசாரணை உச்ச நீதிமன்ற இணையதளம் மற்றும் யூடியூப்பில் நேரடியாக ஒளிபரப்பப்படும். "இந்த தீர்ப்பு சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்- யாருடைய நேரத்தையும் வீணாக்க வேண்டாம், இது பரிசீலிக்கப்பட வேண்டும்" என்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறி இருக்கிறது.
மத்திய அரசு நேற்று கூறி இருந்த கருத்துக்கள்
"எழுப்பப்பட்ட இந்த பிரச்சனைகள், அரசியலமைப்புச் சட்டம் A 145(3)ஐ கருத்தில் கொண்டு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மூலம் தீர்க்கப்பட்டால் அது பொருத்தமானதாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே, இதை ஒரு அரசியலமைப்பு அமர்வின் முன் வைக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்." என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். கணவன், மனைவி, குழந்தைகள் என்ற இந்திய குடும்ப முறைக்கு ஒரே பாலின திருமணங்கள் ஏற்றதல்ல என்று மத்திய அரசு நேற்று கூறி இருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. இப்படி கூறிய மத்திய அரசு, பால்புதுமையினர்(LGBTQ+) தம்பதிகளால் தாக்கல் ,செய்யப்பட்டிருக்கும் மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று கோரி இருந்தது.