'என்னைப் பார்த்து தவெக ஏன் பயப்படுகிறது?': அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் களமிறங்கும் சீமான்
செய்தி முன்னோட்டம்
அதிமுகவிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்த இசக்கி சுப்பையாவின் ராஜினாமாவால் காலியான திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் களம் குறித்துப் பேசுகையில்,"அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். என்னைச் பார்த்துத் தவெகவினர் ஏன் பயப்படுகிறார்கள்? திரைக்கவர்ச்சி என்பது தற்காலிகமானது. இயற்கை, உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் எனப் பேதம் இல்லாமல் அனைத்துக் தரப்பினருக்குமாக நிற்கும் நாம் தமிழர் கட்சியினரான நான், எப்போதுமே அனைத்துத் தேர்தல்களிலும் பொது வேட்பாளர் தான்" எனத் தெரிவித்தார்.
இடைத்தேர்தல் பின்னணி
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல் பின்னணி
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சி. விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்) மற்றும் சத்தியபாமா (தாராபுரம்) ஆகியோரின் ராஜினாமாவால் மொத்தம் 5 தொகுதிகள் காலியாக உள்ளன.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கு நிறைவடைந்ததும் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த சீமான், தற்போது அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் களமிறங்குவது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.