ஆந்திரா-தெலுங்கானா இடையே நதி நீர் பிரச்சனை: சாகர் அணையில் பலத்த பாதுகாப்பு
நேற்று தெலுங்கானா தேர்தல் வாக்கு பதிவு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, தெலுங்கானா அதிகாரிகளின் தடுப்புகளை மீறி நாகார்ஜுனா சாகர் அணைக்குள் நுழைந்த ஆந்திர அதிகாரிகள், அந்த அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட்டனர். எனவே, நாகார்ஜுனா சாகர் அணை பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் கிருஷ்ணா நதியின் இடையே கட்டப்பட்டிருக்கும் நாகார்ஜுன சாகர் அணை, தெலுங்கானா-ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொதுவானதாகும். எனவே, அந்த இரு மாநிலங்களுக்கும் இடையே நதி நீர் பிரச்சனை பல காலங்களாக நீடித்து வருகிறது. நாகார்ஜுன அணையில் மொத்தம் 29 மதகுகள் அமைந்துள்ள நிலையில் அதில் 1 முதல் 13 மதகுகள் தெலுங்கானாவிற்கும், மீதமுள்ள மதகுகள் ஆந்திராவிற்கும் உரியதாகும்.
'இந்த நீர் எங்களுடையது': ஆந்திர அமைச்சர்
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில், பெரும்பாலான தெலுங்கானா அதிகாரிகள் வாக்குப்பதிவு தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்தபோது, கிட்டத்தட்ட 700 ஆந்திர போலீசார் நாகார்ஜுன சாகர் அணைக்குள் நுழைந்து ஒரு மணி நேரத்திற்கு 500 கனஅடி வீதம் கிருஷ்ணா நதி நீரை திறந்துவிட்டனர். நேற்று இதனால் அப்பகுதியில் இரு மாநில அதிகாரிகளுக்கும் இடையே பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. "நாங்கள் எந்த ஒப்பந்தத்தையும் மீறவில்லை. 66% கிருஷ்ணா நதி நீர் ஆந்திராவுக்கும், 34% தெலுங்கானாவுக்கும் சொந்தமானது. எங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு சொட்டு தண்ணீரைக் கூட நாங்கள் பயன்படுத்தவில்லை. எங்கள் பகுதியில் எங்கள் கால்வாயைத் திறக்க முயற்சித்தோம். இந்த நீர் எங்களுடையது" ஆந்திர மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அம்பதி ராம்பாபு கூறியுள்ளார்.
மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் நடைபெறும் கூட்டம்
அங்கு பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நவம்பர் 28-ஆம் தேதிக்கு முன்பு நாகார்ஜுனா சாகர் அணை எப்படி இருந்ததோ அதே நிலையை மீட்டெடுக்குமாறு இரு மாநிலங்களிடமும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே நிலவும் பதற்றத்தை போக்க மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் ஒரு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தின்போது, நாகார்ஜுனா சாகர் அணை மற்றும் ஸ்ரீசைலம் அணை தொடர்புடைய அனைத்து செயல்பாடுகளையும் கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரியத்துக்கு(KRMB) மாற்றுவது தொடர்பான விவாதமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CRPF கண்காணிப்பில் நாகார்ஜுனா சாகர் அணை
மேலும் மோதலைத் தவிர்க்க, நாகார்ஜுனா சாகர் அணையை மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRPF) மேற்பார்வையிட இருக்கிறது. ஒப்பந்தத்தின்படி இரு தரப்பினருக்கும் கிடைக்க வேண்டிய தண்ணீர் பங்கீட்டை இப்போதைக்கு CRPF கண்காணிக்கும். சுமார் 500 ஆயுதம் தாங்கிய ஆந்திர போலீசார் நாகார்ஜுனா சாகர் அணைக்கு வந்து சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியதாகவும், கேட் எண் 5 மற்றும் 7யில் உள்ள ஹெட் ரெகுலேட்டர்களை திறந்து சுமார் 5,000 கனஅடி நீரை வெளியேற்றியதாகவும் தெலுங்கானா தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி குற்றம் சாட்டியதை அடுத்து நேற்று இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
ஆந்திர போலீசாருக்கு எதிராக இரண்டு வழக்குகள் பதிவு
மேலும், ஆந்திராவின் இந்த நடவடிக்கை தெலுங்கானாவில் "சட்டம் ஒழுங்கு பிரச்சனையை" உருவாக்கி உள்ளது என்றும், ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள இரண்டு கோடி மக்களின் குடிநீர் விநியோகத்தை இதுகடுமையாக பாதிக்கும் என்றும் தலைமைச் செயலாளர் சாந்தி குமாரி கவலை தெரிவித்தார். . மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்த போது, இந்த பிரச்சனையையும் பெரிதாகியது. இதனையடுத்து, தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஆந்திர போலீசாருக்கு எதிராக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு ஆந்திர காவல்துறையினர் இதேபோல நாகார்ஜுனா சாகர் அணைக்குள் நுழைய முயன்றனர். ஆனால் தெலுங்கானா பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த முயற்சியை தடுத்தனர்.