கர்நாடக கடற்படைத் தளம் அருகே சீன GPS கருவி பொருத்தப்பட்ட பறவை:உளவு வேலையா?
செய்தி முன்னோட்டம்
கர்நாடக மாநிலத்தின் கார்வார் கடற்கரை பகுதியில், முதுகில் விசித்திரமான கருவி பொருத்தப்பட்ட நிலையில் கடற்பறவை ஒன்று சுற்றி திரிவதை உள்ளூர் மக்கள் கண்டனர். இது குறித்து உடனடியாக வனத்துறை மற்றும் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பறவையின் முதுகில் இருந்த கருவியை ஆய்வு செய்தபோது, அது சீன அறிவியல் அகாடமியின் கீழ் இயங்கும் ஒரு ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. GPS தரவுகளின்படி, இந்தப் பறவை ஆர்க்டிக் பகுதிகள் உட்பட சுமார் 10,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து கார்வார் கடற்கரைக்கு வந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பறவை பிடிபட்ட இடம் இந்தியாவின் மிக முக்கியமான பாதுகாப்பு மையமான INS கடம்பா கடற்படைத் தளத்திற்கு மிக அருகில் உள்ளது.
விசாரணை
பாதுகாப்பு துறையினர் தீவிர விசாரணை
ஆசியாவிலேயே மிகப்பெரிய கடற்படை தளங்களில் ஒன்றாக INS கடம்பா உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே எல்லைப் பதற்றம் நிலவி வரும் சூழலில், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடத்தின் அருகே சீனக் கருவியுடன் பறவை கண்டெடுக்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது பறவைகளின் இடம்பெயர்வு குறித்து ஆய்வு செய்வதற்காக சீன ஆராய்ச்சியாளர்களால் பொருத்தப்பட்ட கருவியாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் வனத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், இதில் ஏதேனும் உளவு பார்க்கும் கேமராக்கள் அல்லது பிற கருவிகள் உள்ளனவா என்பதை உறுதி செய்ய அந்த ஜிபிஎஸ் கருவி விரிவான தொழில்நுட்ப ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு புலனாய்வு அமைப்புகள் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றன.