நிபா வைரஸ் கட்டுக்குள் வந்ததால் கேரளா கோழிக்கோட்டில் நாளை பள்ளிகள் திறப்பு
கேரளா மாநிலத்தில் அண்மை காலமாக நிபா வைரஸ் அதிகரித்து வருகிறது என்று தொடர்ந்து செய்திகள் வெளியானது. இந்த வைரஸ் காரணமாக 2 பேர் கேரளாவில் உயிரிழந்த நிலையில் 6 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது என்றும் தகவல்கள் வெளியானது. அதே போல் தொற்று பாதிப்பு ஏற்பட்டோரின் தொடர்பில் இருந்தவர்கள் என 1200 பேர் கண்டறியப்பட்டனர். நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே கேரளா மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் நிபா வைரஸ் பரவலை தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர்.
முகக்கவசம் கட்டாயம் என உத்தரவு
இந்நிலையில் தொற்று பாதிப்பு ஏற்பட்டோரின் தொடர்பில் இருந்தவர்கள் என கண்டறியப்பட்ட1200 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர்களுள் யாருக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை. இதற்கிடையே, நிபா வைரஸ் பரவலை தடுக்க கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. கடைகள் திறப்பு நேரத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது புதிதாக யாருக்கும் நிபா வைரஸ் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதால் நாளை(செப்.,25) முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்கும் என்று கோழிக்கோடு மாவட்டத்தின் ஆட்சியர் கீதா உத்தரவிட்டுள்ளார். எனினும், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், முகக்கவசம் கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது.