சனாதன ஒழிப்பு மாநாடு விவகாரம் - சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
சென்னையில் அண்மையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாடு என்னும் நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அதில் அவர் சனாதனம் குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பலரும் உதயநிதி ஸ்டாலின் மீது எதிர்ப்பு தெரிவித்து வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். அதேபோல் அந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்றிருந்தார். இந்நிலையில், இவர்கள் இருவரும் அந்த மாநாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றது இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்கு முரணானது என்று கூறி சென்னையை சேர்ந்த ஜெகன்நாத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை
மேலும் அவர் அந்த மனுவில், அமைச்சர்கள் சனாதன தர்மத்திற்கு எதிரான இந்த மாநாட்டில் பங்கேற்றது அரசியல் அமைப்பு சாசனத்திற்கு முரணானது என்று அறிவிக்கவேண்டும் என்று கோரியுள்ளார் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அவர், இந்த சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணி என்ன? என்பதனை விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார் என்று தெரிகிறது. இந்த வழக்கு மீதான விசாரணையில் உதயநிதியை நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்படுமோ?, அல்லது இது அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா? என்பது வழக்கறிஞர் முறையிடுவதன் அடிப்படையில் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.