ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
ஒரே பாலின தம்பதிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவது தொடர்பான பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவது தொடர்பான இறுதி வாதங்களை ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்தது.
இந்திய தலைமை நீதிபதி(CJI) டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ் ரவீந்திர பட், ஹிமா கோஹ்லி மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு, பத்து நாள் மாரத்தான் விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதிகள் வழங்கியுள்ளனர்.
ஒரே பாலின திருமணத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
கஜ்ட்க்
5 நீதிபதிகளுள் 3 நீதிபதிகள் ஒரே-பாலின திருமணத்திற்கு எதிர்ப்பு
ஆனால், நீதிபதிகள் கோஹ்லி, நரசிம்ஹா, பட் ஆகியோர் அதற்கு எதிராக உத்தரவு பிறப்பித்ததோடு, 'திருமணம் என்பது அடிப்படை உரிமை இல்லை' என்று கூறியுள்ளனர்.
'சிவில் யூனியன்'(திருமணம் அல்லாத சட்டபூர்வ உறவு) செய்து கொள்ள அனுமதிக்கும் உரிமையை அங்கீகரிப்பது அரசியலமைப்புரீதியாக அனுமதிக்கப்படாது என்று நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா கூறியுள்ளார்.
LGBTQIA+ தம்பதிகளுக்கு குழந்தைகளை தத்தெடுக்கும் உரிமை உள்ளது என்று தலைமை நீதிபதி கூறியிருந்த நிலையில், தலைமை நீதிபதியின் அந்த கருத்துக்கு தான் உடன்படவில்லை என்று நீதிபதி ரவீந்திர பட் தெரிவித்துள்ளார்.
எனவே, 5 நீதிபதிகளுள் 3 நீதிபதிகள் ஒரே-பாலின திருமணத்திற்கும் LGBTQIA+ தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம்.