சதய விழா 2024 ஸ்பெஷல்: இன்றைய ஒதுவார்களின் நிலைமை: சிறப்புமிக்க மரபை பாதுகாக்கும் பணி
ஓதுவார்கள், தமிழகத்தில் மன்னர் காலத்தில் முக்கிய பங்கு வகித்த கலைஞர்கள் ஆவர். இவர்கள் சைவ கோவில்களில் திருமுறைகள் உள்ளிட்ட பக்திப் பாடல்களை பாடி வந்தனர். சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய மன்னர்களில் ஒருவரான ராஜராஜ சோழனின் ஆட்சிக்காலத்தில் மத மற்றும் கலாச்சார வாழ்க்கையில் இவர்கள் முக்கிய இடம் பெற்றனர். சிவபெருமானை போற்றும் தேவாரம் மற்றும் திருவாசகம் போன்ற பாடல்களைப் பாடிய ஓதுவார்கள், அந்தகாலத்தில் கோயில்களின் வழிபாட்டு முறையின் முக்கிய அங்கமாக இருந்தனர். தற்போது, இவர்கள் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே இருக்கும்போதிலும், தமிழ்நாட்டின் சில கோயில்கள் மற்றும் சமுதாயங்களில் இவர்கள் மரபு தொடர்ந்து பின்பற்றப்படுகின்றது. ராஜரா சோழனின் சதயவிழா நவம்பர் 10 அன்று கொண்டாடப்படும் நிலையில், ஓதுவார்கள் குறித்து இதில் விரிவாக பார்க்கலாம்.
சோழர் காலத்தில் ஓதுவார்களின் வரலாற்றுப் பங்கு
சோழர் ஆட்சியில், குறிப்பாக முதலாம் ராஜ ராஜ சோழன் ஆட்சியின்போது, ஓதுவார்கள் மதிப்பும் மரியாதையும் பெற்றவர்களாக இருந்தனர். சைவ நாயன்மார்கள் இயற்றிய தேவாரம் மற்றும் திருப்பதிகங்களை கோயில்களில் பாடுவதன் மூலம் இவர்கள் தெய்வம் மற்றும் மக்களுக்கிடையிலான உறவை உருவாக்கினர். அரசின் ஆதரவால், இந்த பாட்டுப் பாரம்பரியத்தை பாதுகாக்கும் பொறுப்பும் அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. சைவ சமயத்தைப் பின்பற்றும் கோயில்களில் நடக்கும் பூஜைகள், திருவிழாக்களில் இவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டது.
காலப்போக்கில் நிலைமையில் ஏற்பட்ட மாற்றம்
சோழர் காலத்திற்கு பிறகு, அரசின் ஆதரவு குறைவதன் காரணமாக ஓதுவார்களின் நிலைமை மோசமானது. இதனால் ஓதுவார் பனி செய்வதில் ஆர்வம் காட்டுபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இந்நிலையில், ஓதுவார் மரபை பாதுகாக்க, தமிழ்நாடு அரசு மற்றும் பல கலாச்சார அமைப்புகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தமிழக அரசு சார்பில், சென்னை, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மற்றும் பழனி முருகன் கோவில் ஆகிய இடங்களில் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு, இதற்கென சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு ஓதுவார் நியமனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும், இதில் சேறும் இளைஞர்களின் எண்ணிக்கையும் சொற்பமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓதுவார் பணிக்கான சவால்கள் மற்றும் எதிர்காலம்
ஓதுவார் பணிக்கு தொடர்ந்து ஆதரவுகள் இருந்தாலும், அவர்கள் இன்னும் சில சவால்களை எதிர்கொள்கின்றனர். டிஜிட்டல் ஊடக வளர்ச்சியால் பக்திப் பாடல்கள் பல வடிவங்களில் வந்துள்ளதால் இளைய தலைமுறையினர் புதுமையான வழிபாட்டுப் பாடல்களை விரும்புகின்றனர். எனினும், கோவில்களின் பாரம்பரியத்தில் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டவர்களுக்கு ஓதுவார் வாழ்க்கை மரியாதைக்குரிய பணியாகவே தொடர்கிறது. அதிகமான விழிப்புணர்வு மற்றும் அரசின் ஆதரவு இருந்தால், ஓதுவார்களின் பணி தொடர்ந்து பாரம்பரியத்தின் முக்கியப் பங்காக இருக்கும். இன்றைய ஒதுவார்கள் சோழர் காலத்திலிருந்தே வாழையடி வாழையாக வந்த நம்பிக்கையை காப்பாற்றி வருகிறார்கள். இவர்களின் சமூகப் பங்கு மாறியிருந்தாலும், அரசின் ஆதரவு மற்றும் சமுதாயத்தின் ஈடுபாடு இருந்தால், இவர்கள் எப்போதும் பாரம்பரியத்தின் முக்கியமான கலாச்சார பகுதியாகவே இருப்பார்கள்.