சபரிமலை பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய கட்டுப்பாடு விதிப்பு
கேரளா மாநிலம், சபரிமலையில் நாளை(டிச.,27)மண்டல பூஜை நடக்கவுள்ளது. நேற்று(டிச.,25)ஒரேநாளில் 1,00,909 பேர் சாமி தரிசனம் செய்ததாகவும், சுமார் 15 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய இன்றும், நாளையும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் இன்று(டிச.,26) கூட்டம் ஓரளவு கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இன்று மாலை தங்க அங்கி ஊர்வலம் சன்னிதானம் வந்து சேரும் என்பதால் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று பம்பையிலிருந்து சன்னிதானம் செல்வதற்கு மதியம் 1-மாலை 6 மணிவரை அனுமதியில்லை. அதனை தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு தங்க வங்கி அணிவித்து தீபாராதனை காட்டப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நாளை சுபமுகூர்த்தத்தில் மண்டலப்பூஜை நடக்கவுள்ளது
அதே போல், மாலை 3 மணிக்கு பதில் மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். தங்க அங்கி ஊர்வலத்தை சன்னிதான தேவசம் அதிகாரிகளால் வரவேற்பு அளிக்கப்பட்ட பின்னர் தந்திரி மற்றும் மேல்சாந்தி தங்க அங்கியை கோயில் கருவறைக்குள் எடுத்து சென்று மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். நாளை(டிச.,27)காலை 10.30-11.30 மணிக்கு இடையேயுள்ள சுபமுகூர்த்தத்தில் மண்டலப்பூஜை நடக்கவுள்ளது. மண்டல பூஜை தினமன்று காலை 9.45 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும் என்பது குறிப்பிடவேண்டியவை. இதனிடையே, மண்டல பூஜையையொட்டி இன்று(டிச.,26) 64 ஆயிரம் பக்தர்களும், நாளை 70 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் முன்பதிவு மூலம் சபரிமலைக்கு செல்ல முடியும் என்பதால் கூட்டம் கட்டுக்குள் வந்தது குறிப்பிடத்தக்கது.