விதி எண்.176 Vs.விதி எண்.267; நாடாளுமன்றத்தில் மீண்டும் எதிர்க்கட்சிகள் - மத்திய அரசு இடையே மோதல்
செய்தி முன்னோட்டம்
மணிப்பூர் விவகாரத்தில் உடனடியாக மத்திய அரசு தகுந்த விளக்கமளிக்க கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் போராட்டம் துவங்கியதை தொடர்ந்து அந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து கலவரமாக மாறியது.
இதுவரை இந்த கலவரத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வன்முறை கும்பலால் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதன் எதிரொலியாக நேற்று(ஜூலை.,20) துவங்கிய நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
அமளி
நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட மழைக்கால கூட்டத்தொடர்
அதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் இன்றும்(ஜூலை.,21) மக்களவை துவங்கியதும் மணிப்பூர் விவகாரம் குறித்து விதி எண்.267ன் கீழ் நீண்ட விவாதம் நடத்த வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் மாநிலங்களவை தலைவரும், பாஜக கட்சி தலைவருமான ஜக்தீப் தங்கர், விதி எண்.176ன் கீழ், குறுகிய விவாதத்தினை நடத்தி முடிக்க மத்திய அரசு தயாராகவுள்ளது என்று கூறியுள்ளார்.
இதனால் மீண்டும் எதிர்க்கட்சிகள் மற்றும் மத்திய அரசு இடையே மோதல் ஏற்பட்டது.
மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசு உடனடியாக தகுந்த விளக்கத்தினை அளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் பிற்பகல் 12 மணிவரை கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் மக்களவை கூடியதும் மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவையானது நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.