திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது
திருப்பூர் அவிநாசி சாலையில் 'பெட் பாங்க் பைனான்சியல் சர்வீஸ்' என்னும் பெயரில் வங்கி சாரா நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 297 பவுன் போலி நகைகள் வாடிக்கையாளர்கள் பெயரில் அடகு வைக்கப்பட்டு லட்சக்கணக்கில் மோசடி நடந்திருப்பதாக அதன் மண்டல வர்த்தகப்பிரிவு பொறுப்பாளர் சரண் சிவகுமார் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அந்த பேர்களில் உள்ள வாடிக்கையாளர்களை போலீசார் விசாரித்துள்ளார்கள். அப்போது அவர்கள் அடகு வைத்த நகைகளை உரிய பணம் செலுத்தி திருப்பி விட்டதாக கூறியுள்ளார்கள். அதனால் அவர்கள் பெயரில் வங்கி பெட்டகத்தில் இருந்த நகைகளை எடுத்து சோதனை செய்து பார்த்துள்ளார்கள். அப்போது அந்த நகைகள் யாவும் போலி என்று தெரியவந்தது.
மோசடி செய்தோரை கண்டறிந்த போலீசார்
கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 376 கிராம்(297 பவுன்)நகையினை இதுபோல் போலியாக தயாரித்து ரூ.81 லட்சம் மோசடி நடந்துள்ளது. இந்த சம்பவம் 2019ம்ஆண்டு முதல் 2021ம்ஆண்டு வரை நடந்துள்ளது. இதனையடுத்து போலீசார் நிதிநிறுவன மேலாளரான உடுமலையை சேர்ந்த சிவா(29), நகை மதிப்பீட்டாளராக பணியாற்றிய திருப்பூர் செட்டிபாளையம் பொங்குபாளையத்தை சேர்ந்த பிரபு(32) மற்றும் ஊழியரான குன்னத்தூரை சேர்ந்த விஸ்வநாதன்(32) ஆகியோரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தியுள்ளார்கள். அப்பொழுது அடகுவைத்த நகைகளை திருப்பிச்சென்ற பிறகு அந்த வாடிக்கையாளர்களின் கணக்கினை முடிக்காமல், அதில் ஏற்கனவே வைத்த நகைப்போல் போலி நகையினை தயாரித்து கொண்டுவந்து வங்கி பெட்டகத்தில் வைத்து ரூ.81லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் போலீசார் நேற்று(ஏப்ரல்.,18) கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.