கனமழையால் சேதமடைந்த கோயில்களை சீரமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு மாநிலத்தில் 'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இத்தகைய பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க மாநில அரசு போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்குள் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிலான அதி கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அம்மாவட்டங்களில் வெள்ள நீர் சூழ்ந்து பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தண்டவாளங்களில் வெள்ளம் பாய்ந்ததால் பாதிப்புகள் ஏற்பட்டு ரயில்சேவையும் நிறுத்தப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 26 கோயில்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்
இதனிடையே அப்பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மெல்ல மெல்ல தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இன்று(டிச.,26) துறை ரீதியிலான ஆய்வு கூட்டமானது சென்னை நுங்கம்பாக்கம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் தென் மாவட்டங்களில் கொட்டிய அதிகனமழை மற்றும் மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 26 கோயில்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிப்படைந்த அக்கோயில்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதற்கட்டமாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.