
இன்று முதல் வங்கிகளில் '2000 ரூபாய் நோட்டு'க்களை மாற்றும் செயல்முறை துவக்கம்!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்பப் பெறும் அறிவிப்பை கடந்த 19-ம் தேதி வெளியிட்டது ரிசர்வ் வங்கி.
இன்று முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை இந்த 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.
2000 ரூபாய் நோட்டை மாற்ற விரும்புபவர்கள் உங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு வங்கிக் கிளைக்குச் செல்லவும்.
அங்கே 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கான கோரிக்கை சீட்டு உங்களுக்கு அளிக்கப்படும். அந்தச் சீட்டில் உங்களுடைய பெயர், உங்கள் அடையாள அட்டை எண் மற்றும் நீங்கள் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுக்கள் குறித்த தகவல்களை நிரப்பி கையெழுத்திடவும்.
இந்தியா
ரூபாய் நோட்டை மாற்றுவதற்கான வழிமுறை:
கையெழுத்திட்ட கோரிக்கை சீட்டுடன் நீங்கள் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து புதிய நோட்டுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
எனினும், SBI வங்கியானது 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற மேற்கூறியது போல கோரிக்கை சீட்டோ, அடையாள அட்டையோ தேவையில்லை என அறிவித்திருக்கிறது.
இந்த செயல்முறைக்கு குறிப்பிட்ட வங்கியில் உங்களுக்கு வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஒருமுறையில் 20,000 ரூபாய் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை மட்டுமே மாற்ற முடியும். ஒரே நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம்.
ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு மட்டுமே 20,000 ரூபாய் என்ற உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நமது வங்கிக் கணக்கில் எத்தனை 2000 ரூபாய் நோட்டுக்களை வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.