2024 பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக வேட்டி, சேலை, பொங்கல் பொருட்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த வருட பொங்கலுக்கு வேட்டி மற்றும் சேலை உற்பத்தி செய்வதற்காக ரூ.200 கோடி முன்பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழிக அரசு தெரிவித்துள்ளது. அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 1,68,00,000 சேலைகள் மற்றும் 1,63,00,000 வேட்டிகள் உற்பத்தி செய்யப்படும் என்றும் தமிழிக அரசு தெரிவித்துள்ளது. இந்த பணிகளை கண்காணிப்பதற்கும் திறம்பட செய்து முடிப்பதற்கும் வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட இருக்கிறது.
கைரேகை பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே பொங்கல் பொருட்கள்
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர், வருவாய்த் துறை மற்றும் கைத்தறி ஆணையர் ஆகியோரும் இந்த குழுவில் அடங்குவர். இலவச வேட்டி, சேலைகள் மக்களிடம் சரியாக சென்று கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரேஷன் கடைகளில் கைரேகையை பதிவு செய்த பிறகே, மக்கள் பொங்கல் பொருட்களை பெற முடியும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. மேலும், இதை எல்லாம் செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் ஆணையர், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.