
ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை
செய்தி முன்னோட்டம்
ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் கொள்ளை வழக்கில் பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கொள்ளையர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட உண்மை வைரத்திற்கு பதிலாக, போலி வைரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தங்கம், வைர வியாபாரியான சந்திரசேகர் (56) மீது கடந்த மே 4ஆம் தேதி வடபழனி நட்சத்திர ஹோட்டலில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி, ரூ.20 கோடி மதிப்புள்ள வைரத்தை கொள்ளை அடித்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வடபழனி போலீசார், 24 மணி நேரத்துக்குள் திருநெல்வேலியைச் சேர்ந்த ஜான் லாயிட் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து, வைரத்தையும் மீட்டனர். இந்த மீட்கப்பட்ட வைரங்களே போலி என தற்போது கூறப்பட்டுள்ளது.
போலி வைரம்
நீதிமன்றத்தில் போலி வைரம் ஒப்படைக்கப்பட்டதா?
பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட வைரம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், ஒப்படைக்கப்பட்ட வைரம் போலியாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததையடுத்து, நீதிபதி உரிய சோதனைக்காக மதிப்பீட்டாளர்களை அழைத்துள்ளார்.
அதே நேரத்தில், புகார்தாரர் நகைக்கடை உரிமையாளர் சந்திரசேகர், "போலீசார் உண்மை வைரத்தை மாற்றி வைத்துள்ளனர்" என சென்னை காவல் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, உயர் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சந்தேகம்
சந்தேக பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்கள்
இந்த விவகாரத்தில், மதுரையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் தான் இந்த வைரம் விற்பனை தொடர்பாக தன்னை அழைத்ததாக சந்திரசேகர் கூறியிருந்தாலும், அவரது பெயர் எழுத்துப்பூர்வ புகாரில் குறிப்பிடப்படவில்லை.
இதனால் அந்த தொழிலதிபரின் சந்தேக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட வைரம் முதலில் தூத்துக்குடி மாவட்ட போலீசாரால் கைப்பற்றப்பட்டு பின்னர் சென்னை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனால் அவர்களிடமும் விசாரணை நடைபெறும் எனக்கூறப்படுகிறது.
இது தவிர, கொள்ளையரிடம் பறிமுதல் செய்த வைரத்தை, சந்திரசேகர் தரப்பில் கடைசியாக, ஜானகி, சுப்பிரமணி யன், மாசானம், வன்னிய ராஜன் ஆகியோர் பார்த்துள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடக்கிறது.