சிவகங்கை காளையார்கோவிலில் ரோமானிய நாணயம் கண்டெடுப்பு
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அடுத்துள்ள இலந்தக்கரை என்னும் பகுதியில், ரோமானிய நாணயம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை அகழாய்வு பணிகள் அப்பகுதியில் நடந்து வரும் நிலையில் இந்த நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இது குறித்து தொல்லியல் ஆர்வலர் ரமேஷ் என்பவர் கூறுகையில், "இலந்தக்கரை மேட்டுப்பகுதியில், 1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிரியா நாட்டின் தங்க நாணயம் ஒன்றும், 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மகத பேரரசரின் வெள்ளி முத்திரை நாணயம் உள்ளிட்டவை கிடைத்துள்ளது" என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர், "இதன் மூலம் இந்த பகுதி, அந்த காலத்தில் பன்னாட்டு தொழில்களை மேற்கொள்ள வளமான பகுதியாக இருந்துள்ளது என்பது தெரிகிறது" என்றும் குறிப்பிட்டார்.
கடல் மார்க்கமாக வணிகம்
தொடர்ந்து அவர், "இங்கு உற்பத்தி செய்த பொருட்களின் மூலப்பொருட்கள் அனைத்தும் வடஇந்தியாவில் இருந்து கொண்டு வந்திருக்கக்கூடும்" என்றும், "அப்பொருட்களை கொண்டு, கல்பாசிகள் போன்ற பல ஆபரணங்கள் செய்யப்பட்டு, கடல் மார்க்கமாக வணிகம் செய்திருக்கவேண்டும்" என்றும் கூறியுள்ளார். இதனிடையே, இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள ரோமானிய நாணயம் செம்பு உலோகத்தால் செய்யப்பட்டுள்ளது. 1.50 கிராம் எடைகொண்ட இந்நாணயம், 13 மில்லி மீட்டர் அளவில் உள்ளது என்றும், இதன் ஒரு பக்கத்தில் ஆலிவ் இலைகளின் நடுவில் சிறு எழுத்துகளும், மறுபுறம் ரோம பேரரசின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, இப்பகுதியில் ஏற்கனவே ஹரப்பா, மொகஞ்சதாரோ, சிந்து சமவெளி உள்ளிட்ட பகுதிகளில் கிடைத்தது போல் பொத்தான் கிடைத்துள்ள நிலையில், இலந்தக்கரையினை மற்றுமொரு கீழடி தொல்லியல் தளமாக பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.