அரசியல் பாகுபாடின்றி ஆர்.எம்.வீரப்பன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் தலைவர்கள்; ஆர்எம்வி கடந்து வந்த பாதை
தமிழக அரசியலில் மிகவும் முக்கியமானவரும், மூத்தவருமான ஆர்.எம்.வீரப்பன், எம்ஜிஆரின் வலது கையாக இருந்தவர் என்றே கூறலாம். இருவரையும் தனித்தனியே பிரிக்க முடியாது என்பது போல எம்ஜிஆருக்கு எல்லாமுமாக இருந்தவர் ஆர்எம்வி. அவரின் விசுவாசி என்பதையும் தாண்டி, எம்ஜிஆர் அவருக்கு உரிய மரியாதையை தரத்தவறியதே இல்லை. பொலிடிகல் ஸ்ட்ராட்டஜிஸ்ட் என்றே அவரை கூறலாம். ஆர்.எம்.வி-இன் சொந்த ஊர், புதுக்கோட்டை மாவட்டத்தின் வல்லதிராக்கோட்டை கிராமம். தொடக்க காலத்தில் அவர் பேரறிஞர் அண்ணாவிடம் உதவியாளராக இருந்தார். பின்னர் ஈ.வே.ரா தனிப்பட்டு கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரிடம் உதவியாளராக இருந்தார். இருபெரும் தலைவர்களிடம் அவர் பெற்ற நற்பெயரும், நம்பிக்கையுமே எம்ஜிஆர் அவரை விருப்பப்பட்டு அழைத்துக்கொள்ள காரணம்.
உதவியாளர் டு படத்தயாரிப்பாளர்
எம்ஜிஆருக்கு உதவியாளராக பணிபுரிந்த போது தான், அவர் எம்ஜிஆருக்காக படத்தயாரிப்பில் இறங்கினார். ஆரம்பத்தில் எம்ஜிஆரின், எம்ஜிஆர் நாடக மன்றம் மற்றும் எம்ஜிஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு 1953 முதல் நிர்வாக பொறுப்பாளராக இருந்தார் ஆர்.எம்.வி. பின்னர் சொந்தமாக சத்யா மூவிஸ் என 1963ஆம் ஆண்டில் படத்தயாரிப்பு பணிகளை தொடங்கினர் ஆர்.எம்.வீரப்பன். எம்ஜிஆர்-இடம் படத்தின் கதையை சொல்வதற்கு முன்னர் அதனை கேட்பவர் ஆர்.எம்.வீ தான். எந்த இயக்குனருடன் நடிக்கவேண்டும், எப்போது நடிக்கலாம், என்ன கதை, நடிகை யார் என பல விஷயங்களை ஆர்.எம்.வி மேற்பார்வையிட்டு, ஒப்புதல் அளித்த பிறகே எம்.ஜி.ஆர் செவிக்கு செல்லும். குறிப்பிட்ட காலத்திற்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிடமிருந்து ஒதுங்கியதற்கும் ஆர்.எம்.வி-யே காரணம் என்கிறார்கள் அரசியல் தெரிந்தவர்கள்.
அரசியல் என்ட்ரி
எம்ஜிஆர், அதிமுக கட்சி தொடங்கி அரசியலில் இறங்க முடிவெடுத்ததும், அதற்காக அடிப்படை பணிகளை மேற்கொண்டவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின்னர் அவரது மனைவி வி.என்.ஜானகியை முதலமைச்சராக முன்மொழிந்து, அவரை சம்மதிக்க வைத்ததும் அவரே. அதன்பிறகு, சற்று அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த ஆர்.எம்.வீரப்பனை ஜெயலலிதா மீண்டும் அரசியலுக்கு அழைத்து வந்து, அமைச்சரவையில் பல்வேறு துறைகளின் அமைச்சராக பொறுப்பு தந்தார். ஆனால் ரஜினிகாந்திற்கு, ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட மோதலில், ஆர்.எம்.வீ, ரஜினியின் பக்கம் நிற்க அவரை கட்சியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா. அதன் தொடற்சியாக, எம்.ஜி.ஆர். கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை 1995ஆம் ஆண்டு நிறுவினார் ஆர்.எம்.வீரப்பன். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்த ஆர்.எம்.வி இன்று காலமானார்.