பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் வீழ்ச்சி.. 500 கோடி சொத்து மதிப்பை இழந்த ரிஷி சுனக்கின் மனைவி!
கடந்த வாரம் வியாழக்கிழமை தங்களுடைய நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது இன்ஃபோசிஸ் நிறுவனம். அதன் எதிரொலியாக நேற்றும் அந்நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைச் (10%) சந்தித்தன. இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியுமான அக்ஷதா மூர்த்தி அந்நிறுவனத்தில் 0.94% பங்குகளைத் தன்வசம் வைத்திருக்கிறார். இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்ததையடுத்து நேற்று 61 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 500 கோடி) சொத்து மதிப்பை இழந்திருக்கிறார் அவர். இது அவர் கொண்டிருக்கும் சொத்து மதிப்பில் ஒரு சிறிய பகுதி தான். இன்னும், 450 மில்லியன் பவுண்டுகள் சொத்து மதிப்பைக் கொண்டிருக்கிறார் அக்ஷதா மூர்த்தி.
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் அக்ஷதா மூர்த்தி:
அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பும், வருவாயும் ரிஷி சுனக்கின் அரசியல் வாழ்விலும் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. அக்ஷதா மூர்த்தி பிரிட்டனில் நிரந்தரக் குடியிருப்பு அல்லாதவர் என்ற நிலையைக் கொண்டிருப்பதாகக் கடந்த ஆண்டு தகவல் வெளியானது. பிரிட்டனில் நிரந்தரக் குடியிருப்பு அல்லாதவர் என்ற நிலையைக் கொண்டிருப்பவர்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் தங்கள் வருவாய்க்குப் பிரிட்டனில் வரி செலுத்தத் தேவையில்லை. முற்றிலும் சட்டத்திற்கு உட்பட்டு தான், தான் இந்த நிலையைக் கொண்டிருப்பதாக விளக்கமளித்த அக்ஷதா பின்னர் தனது வெளிநாட்டு வருவாய்க்கும் வரி செலுத்தவிருப்பதாகத் தெரிவித்தார். கடந்த மாதம் தான் தன்னுடைய நிதி அறிக்கையை வெளிப்படையாக வெளியிட்டார் ரிஷி சுனக். அதில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கு மேலாக வரியாக அவர் செலுத்தியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.