மகள்களுக்கு சொத்துரிமை இல்லாததால் மீண்டும் திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய தம்பதியர்
தங்களது முழு சொத்தையும் மகள்களுக்கு வழங்கும் உரிமை முஸ்லீம் வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் இல்லை என்பதால், ஒரு கேரள தம்பதியினர் மதச்சார்பற்ற சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து, கேரளாவை சேர்ந்த வழக்கறிஞரும் நடிகருமான சி.சுக்கூர் மற்றும் அவரது மனைவி ஷீனா ஆகியோர் மார்ச் 8ஆம் தேதி மீண்டும் தங்கள் திருமணத்தை பதிவு செய்தனர். இந்தியாவில் முஸ்லீம்களுக்கான சொத்துரிமை, ஷரியத் சட்டம் 1937ஆல் நிர்வகிக்கப்படுகிறது. இந்த சட்டத்தின்படி, சுக்கூரின் சொத்துகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அவரது மகள்களுக்கு செல்லும், மீதமுள்ள சொத்துக்கள் சுக்கூரின் சகோதரருக்கு சொந்தமாகும். ஆண்கள் மட்டுமே சொத்துரிமை வைத்திருக்க வேண்டும் என்பது தான் பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் பின்பற்றப்பட்டு வருகிறது.
1956ஆம் ஆண்டு வரை எந்த பெண்ணுக்கும் சொத்துரிமை இல்லை
1956 வரை இந்தியாவில் எந்த பெண்ணுக்கும் சொத்துரிமை இல்லாமல் தான் இருந்தது. அதாவது, தந்தையின் சொத்துக்கள் மகனுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கும். மகள்கள் மற்றும் மனைவி, தந்தை/கணவரை மட்டுமே நம்பி வாழ வேண்டும். இது 1956ல் கொண்டுவரப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டத்தால் மாற்றப்பட்டது. இந்த சட்டம் இந்து பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை வழங்குகிறது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு இருக்கும் சட்டத்தில் அதற்கான வழியில்லை. ஆனால், தந்தை எப்போது வேண்டுமானாலும் தன் முழு சொத்தையும் மகள்களுக்கு பரிசாக வழங்கலாம். சுக்கூரும் இதுபோல தன் சொத்துக்களை மகள்களுக்கு வழங்கி இருக்கலாம். ஆனால், அவர் முஸ்லீம் சட்டத்தில் மாற்றம் வேண்டும் என்பதை உலகிற்கு கூறுவதற்காகவே மதச்சார்பற்ற சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தன் மனைவியை மீண்டும் திருமணம் செய்துள்ளார்.