தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி நாளை பதவியேற்க உள்ளதாக தகவல்
தெலுங்கானா காங்கிரஸின் முன்னணி தலைவரான ரேவந்த் ரெட்டி நாளை முதல்வராக பதவியேற்க வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் களத்தில் இறங்கி வேலை செய்து, தற்போதைய முதல்வர் கே.சி.ஆருடன் போட்டியிட்டு வென்ற ரேவந்த் ரெட்டி, நாளை அல்லது நாளை மறுநாள் பதவியேற்பார் என செய்திகள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர்களான உத்தம்குமார் ரெட்டி மற்றும் பட்டி விக்ரமார்கா ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் அல்லது அவர்களுக்கு நல்ல இலாகாக்கள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவரும் மல்காஜ்கிரி மக்களவை எம்பியுமான ரேவந்த் ரெட்டி தெலுங்கானா அரசியலில் முக்கிய நபராக இருந்து வருகிறார். 2017இல் அவர் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து காங்கிரஸுக்கு மாறியதில் இருந்து அவரது செல்வாக்கு உயர்ந்து கொண்டே போகிறது.
தெலுங்கானா சட்டசபை தேர்தல் முடிவு
இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ரெட்டி, இப்போது தெலுங்கானா காங்கிரஸின் முக்கிய தலைவராக மாறியுள்ளார். கே.சி.ஆர் குறித்த ரெட்டியின் விமர்சனங்கள், ஆக்ரோஷமான பிரச்சார உத்திகள் ஆகியவையால் தான் தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதாக பேசப்படுகிறது. இதன் காரணமாகவே அவரை தான் காங்கிரஸ் முதலமைச்சராக நியமிக்கும் என்று நம்பப்டுகிறது. சமீபத்தில் நடந்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுள் 60 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ், தெலுங்கானாவில் ஆளும் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) அரசை வீழ்த்தியது. பிஆர்எஸ் 39 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த நிலையில், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கேசிஆர் மாநில ஆளுநரிடம் தெரிவித்தார்.