
கரூர் கூட்ட நெரிசல் வழக்கை மேற்பார்வையிடும் முன்னாள் நீதிபதிக்கும் ஜல்லிக்கட்டுக்கு இப்படியொரு தொடர்பா? முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சம்பவத்தின் பின்னணியையும், காரணமானவர்களையும் கண்டறிய சென்னை உயர் நீதிமன்றம் முதலில் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டது. ஆனால், தவெக கட்சி பின்னர் உச்சநீதிமன்றத்தை அணுகி, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரியது. இதனைப் பரிசீலித்த உச்சநீதிமன்றம், பல மனுக்களையும் ஒருங்கிணைத்து விசாரித்து, சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் அளித்ததுடன், ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூவர் குழுவை அமைத்து விசாரணைக்கு மேற்பார்வை செய்ய உத்தரவிட்டது.
பின்னணி
முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகியின் பின்னணி
1958 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி ராஜஸ்தானில் பிறந்த அஜய் ரஸ்தோகி, 1982 இல் வழக்கறிஞராக தனது சட்ட வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1990 இல் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2004 இல் உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2006 இல் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2016 இல் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதியாக பணியாற்றிய இவர், 2018 இல் திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார். அதன்பின், அதே ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்வு பெற்றார். 2023 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி வரை அவர் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றினார்.
ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி
தனது பதவிக்காலத்தில் 506 அமர்வுகளில் பங்கேற்று, 158 முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கிய தீர்ப்பும் முக்கியமானதாகும். இப்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கான சிபிஐ விசாரணையை அவர் மேற்பார்வை செய்வது நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. நீதிபதி அஜய் ரஸ்தோகியின் மேற்பார்வை விசாரணைக்கு நம்பிக்கையையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமெனும் நம்பிக்கையையும் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.