உரிமை கோரப்படாத வைப்புநிதி குறித்த தகவல்களுக்கு புதிய வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி
வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புநிதி குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், அவற்றை மீட்க உதவி செய்யும் வகையிலும் புதிய வலைத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி. குறிப்பிட்ட வங்கி என்று இல்லாமல், எந்த வங்கியில் ஒருவருடைய உரிமை கோரப்படாத வைப்புநிதி இருந்தாலும், அதனை இந்த வலைத்தளத்தின் மூலம் தேடிக் கண்டறிய முடியும் வகையில் ஒரு ஒருங்கிணைந்த தளமாக இதனை உருவாக்கியிருக்கிறது ரிசர்வ் வங்கி. உரிமை கோரப்படாத வைப்புநிதியானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்தத் தொகையை உரியவரிடம் கொண்டு சேர்க்கவும் தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது அந்த அமைப்பு. அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகவே தற்போது இந்தப் புதிய வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது ரிசர்வ் வங்கி.
ரிசர்வ் வங்கியின் புதிய வலைத்தளம்:
UDGAM (Unclaimed Deposits - Gateway to Access Information) என்ற பெயரிலேயே உரிமை கோரப்படாத வைப்புநிதி குறித்த தகவல்களைப் பெறுவதற்கான வலைத்தளத்தை உருவாக்கியிருக்கிறது ரிசர்வ் வங்கி. அந்த வலைத்தளப் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும். தற்போது ஏழு வங்கிகள் இத்திட்டத்தின் கீழ், மேற்கூறிய வலைத்தளத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பிற வங்கிகளையும், ஒவ்வொரு கட்டமாக இந்தத் திட்டத்தின் கீழ் இணைக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமை கோரப்படாத வைப்புநிதிக்கான ஒருங்கிணைந்த வலைத்தளத்துடன் இணைந்திருக்கும் வங்கிகள் பட்டியல் கீழே. 1. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 2. பஞ்சாப் நேஷனல் வங்கி 3.சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா 4.தனலக்ஷமி வங்கி 5.சவுத் இந்தியன் வங்கி 6.DBS பாங்க் இந்தியா 7.சிட்டி வங்கி