
பெங்களூரு சுரங்கப்பாதை மரணம்: அனைத்து சுரங்கப்பாதைகள் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
செய்தி முன்னோட்டம்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் தண்ணீர் தேங்கிய சுரங்கப்பாதையில் கார் சிக்கியதால் ஒரு பெண் நேற்று(மே 21) உயிரிழந்தார்.
இதனையடுத்து, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மாநிலத்தில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகள் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளார்.
இன்போசிஸில் பணிபுரியும் 22 வயதான பெண் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் நேற்று கனமழைக்கு மத்தியில் தனது குடும்பத்தினருடன் காரில் பயணித்து கொண்டிருந்த போது, சுரங்கபாதையின் வெள்ளத்தில் கார் சிக்கியதால் உயிரிழந்தார்.
சம்பவம் நடந்த போது, உயிரிழந்த பெண்ணும் அவரது குடும்பத்தினரும் கப்பன் பூங்காவை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் ஓட்டுநர் ஒருவரும் மீட்கப்பட்ட நிலையில், பானுரேகா என்ற 22 வயதுடைய பெண்ணால் உயிர் பிழைக்க முடியவில்லை.
details
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு: சித்தராமையா
பெங்களூரில் உள்ள 18 சுரங்கப்பாதைகள் உட்பட மாநிலத்தில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகள் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இன்று தெரிவித்துள்ளார்.
"எல்லாம் ஒரே நாளில் நடக்காது, ஆனால் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எங்களது குடிமக்களின் உயிரைப் பாதுகாப்பது எங்களது கடமை" என்று டிகே சிவக்குமார் மேலும் கூறினார்.
இந்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் முதல்வர் சித்தராமையா உடனடியாக மருத்துவமனைக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க இருப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என்றும் சித்தராமையா அறிவித்துள்ளார்.